×

புயல் நிவாரண பணிகளுக்காக அரசு அலுவலர், ஆசிரியர் பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் அளிக்க விருப்பம்: அரசாணை வெளியீடு

சென்னை: புயல் நிவாரண பணிகளுக்காக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் சங்கம் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க, பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதை அரசு ஏற்று, டிசம்பர் அல்லது ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தை, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். அதேபோல், பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்தின் மொத்த ஊதியத்தை அடிப்படையாக வைத்து, ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும். பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான வங்கி சேமிப்பு கணக்கில், மின்னணு முறை வழியாக, ஊதிய நாளன்று நேரடியாக செலுத்தப்பட வேண்டும். இதுமட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் நிறுவன பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புயல் நிவாரண பணிகளுக்காக அரசு அலுவலர், ஆசிரியர் பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் அளிக்க விருப்பம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...